சிரியாவில், முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களான ‘அலாவைட்’ சிறுபான்மையினருக்கும், தற்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கும் மூன்று நாட்களாக நடந்து வரும் பயங்கர மோதலில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்காசிய நாடான சிரியாவை, ஆசாத் குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஆசாத் குடும்பத்தினர், அலாவைட் என்ற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
சிரியாவின் மக்கள் தொகையில் இவர்கள், 12 சதவீதம் உள்ளனர். இவர்களது ஆட்சிக் காலத்தில், அலாவைட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவம் மற்றும் அரசு உயர் பதவிகளில் இருந்தனர்.
குறிப்பாக, சிரியாவின் கடற்கரை பிராந்தியங்களான லடாகியா, டார்டஸ் மாகாணங்களில் இவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
சிரியாவில், ஆசாத் குடும்பத்தைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் – ஆசாத் கடந்தாண்டு டிசம்பரில் ஹயாத் தஹ்ரிர் அல் – ஷாம் என்ற சன்னி முஸ்லிம் பிரிவினரால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தன் குடும்பத்தினருடன் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.
அதன்பின், ஹயாத் தஹ்ரிர் அல் – ஷாம் பிரிவினர் இடைக்கால அரசு அமைத்தனர். அப்போது முதல், முந்தைய அதிபருக்கு ஆதரவாக இருந்த அலாவைட் சமூகத்தினரை, புதிய அரசுக்கு ஆதரவாக உள்ள ராணுவம் வேட்டையாடி வருகிறது.
கடந்த 6ம் தேதி முதல் மோதல் வலுத்தது. அலாவைட் சமூகத்தினரின் வீடுகளை கொள்ளையடித்ததுடன் தீயிட்டு எரிக்கத் துவங்கினர். கண்ணில் படுபவர்களை சுட்டுக்கொன்று சடலத்தை சாலையில் வீசி வருகின்றனர்.
குறிப்பாக பனியாஸ் என்ற இடத்தில் சாலைகளிலும், வீட்டு கூரைகளிலும் சடலங்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. அவற்றை எடுத்து அடக்கம் செய்ய முயற்சிப்பவர்களையும் ராணுவம் சுட்டுக் கொல்வதால், உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் சாலையில் கிடக்கின்றன.
பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்களில் 745 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அரசு தரப்பை சேர்ந்த பாதுகாப்பு படையினர் 125 பேரும், ஆசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 148 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
லடாகியாவில் குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. லடாகியாவில் மட்டும் அலாவைட் சமூகத்தினர் 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில், 1,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
சிரியாவில் நடந்து வரும் வன்முறை குறித்து பிரான்ஸ் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. மத அடிப்படையில் நடக்கும் அட்டூழியங்களை கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தும்படி சிரிய இடைக்கால அரசை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.