0% buffered00:00Current time00:00
News

இலண்டனின் ஹீத்ரு விமான நிலையம் அருகே தீ விபத்து!

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என கருதப்படும் இலண்டன் ஹீ்த்ரு விமான நிலையம், அருகேயுள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குறித்த விமான நிலையம் மூடப்பட்டது.

இத்தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீ்த்ரு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸின், இலண்டனுக்கு இன்று (21) மதியம் 12.50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 விமானம் மற்றும் 20.40 மணிக்கு புறப்படவிருந்த UL 504 விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள், இலட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்துக்கு மின்வினியோகம் வழங்கும் மின் நிலையத்தில் நேற்று (20) இரவு கடுமையான தீவிபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து 1 ½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த, 10 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் 70 தீயணைக்கும் வீரர்கள் போராடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்று வட்டார பகுதிகளில் வசித்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீவிபத்து காரணமாக விமான நிலையத்துக்கும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 16,000 வீடுகளுக்கும் மின்விநியோகம் செய்வது முற்றிலும் தடைப்பட்டது. பற்றி எரியும் தீ காரணமாக, சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் யாரும் கதவு ஜன்னல்களை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேறு வழியில்லாத சூழலில் பயணிகள் பாதுகாப்பு கருதி, செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது. இதனால் இலங்கையின் இரு விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டது.

இப்போதைக்கு ஒரு நாள் மட்டுமே செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமான நிலையம் திறக்கப்படும் வரை பயணிகள் யாரும் வரக்கூடாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் இந்த விமான நிலையம் வழியாக 8.3 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top