எங்களுக்கு கட்டளையிடவோ மிரட்டவோ முடியாது… ட்ரம்புக்கு பதிலளித்த ஈரான் ஜனாதிபதி

அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டுவதையும் ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், நான் உங்களுடன் பேச்சுவார்த்தை கூட நடத்த மாட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என ட்ரம்புக்கு பதிலளித்துள்ளார்.
புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தி கடிதம் அனுப்பியதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தைகளால் ஈரானை மிரட்ட முடியாது என்று ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி சனிக்கிழமை கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கு தயாரல்ல என ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக கூறியிருந்தாலும், ஈரானின் வெளிவிவகாரக் கொள்கையை ஜனாதிபதி கட்டுப்படுத்துவதில்லை, அங்கு அனைத்து அரசு விடயங்களிலும் உச்சத் தலைவர் அலி கமேனி இறுதி முடிவை எடுப்பார்.
இந்த மாத தொடக்கத்தில், பெஷேஷ்கியன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார், ஆனால் கமேனி எதிர்க்கும் வரை பேச்சுவார்த்தைகள் நடக்காது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை ட்ரம்ப் ஈரானுக்கு எழுதிய கடிதத்தில், புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தும் அதே வேளை, ஈரான் மறுத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள கமேனி, ஈரானை அச்சுறுத்த முடியாது என்றார். மேலும், அவர்களின் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, அவை ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார்.