அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் பொறுப்பு ஏற்ற மறுநொடியில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கனாடாவின் பொருட்களுக்கு டிரம்ப் இறக்குமதி வரியை 25 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். பின்னர் கனடாவும் பதிலுக்கு அதிக வரி விதித்தது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது.
இது குறித்து பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: நான் ஒவ்வொரு நாட்டுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு வைத்துள்ளேன். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்கள் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் கனடா 51வது மாநிலமாக இருக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு கனடாவின் பொருட்கள் தேவை இல்லை.
அவர்களின் ஆற்றல் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு எதுவும் தேவையில்லை. கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும். எனக்கு கவலையில்லை. உண்மையில், கனடாவின் லிபரல் கட்சியின் ஆட்சியை சமாளிப்பது எளிது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சி தலைவர் போட்டியில் மார்க் கார்னி வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் டிரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ‘கவர்னர் ட்ரூடோ’ என பலமுறை டிரம்ப் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது