சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையை, அந்நாட்டு ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர்.
ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதல், கலவரமாக மாறி நாடு முழுதும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்; 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதில், துணை ராணுவ படைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்தப் போரில், தலைநகர் கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை உட்பட பல்வேறு அரசு நிர்வாக கட்டடங்களை துணை ராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். சமீபகாலமாக, தங்கள் அதிரடி தாக்குதல்கள் வாயிலாக, துணை ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இடங்களை ராணுவத்தினர் கைப்பற்றி வருகின்றனர்.
சமீபத்தில், கார்டூமுக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை ராணுவத்தினர் மீண்டும் தங்கள் வசமாக்கினர். தற்போது, ஜனாதிபதி மாளிகையை அவர்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
‘கடவுள் மிகப்பெரியவர்’ என்ற முழக்கங்களுடன், ஜனாதிபதி மாளிகை முழுதும் ராணுவ வீரர்கள் சுற்றி வருவது, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகும் முன், கார்டூமின் மையப் பகுதிகளில் பல மணி நேரத்துக்கு மேலாக துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.