டிரம்ப் நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் கவலை: அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நாடுகள் பதிலடியாக அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது மேலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே தனது வரி விதிப்பு நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்கப் பொருளாதாரம் மாற்றக் காலத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்தை தொடர்ந்து உலகளவில் பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர்.
இதன்மூலம் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்-பி 500, பிப்ரவரி 19-ந்தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.
சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.