நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்த அறிவிப்பை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தட்டுகளுக்கு இடையேயான அதிக ஒருங்கிணைப்பு விகிதங்கள் காரணமாக, ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு விளிம்பு உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்று என அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில், 3000 கிலோமீட்டர்கள் நீளமுள்ள ஆஸ்திரேலியா-பசிபிக் தட்டு எல்லை மெக்குவாரி தீவின் தெற்கில் இருந்து தெற்கு கெர்மடெக் தீவு வரை நீண்டுள்ளது.
1900 ஆம் ஆண்டு முதல், நியூசிலாந்து அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் சுமார் 15 முறை பதிவாகியுள்ளன. நியூசிலாந்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் 1931 இல் பதிவானது. இந்த நிலநடுக்கம் 256 பேரின் உயிரைப் பறித்தது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் வடக்கில் அமைந்துள்ள ஹாக்ஸ் பே பகுதியில் பதிவானது.