நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையாகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக மன்னராட்சி நடைபெற்று வந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிரான புரட்சிக்கு பின்னனர் தேர்தல் நடத்தப்பட்டு பிரதமர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் அரசியல் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால், கடந்த 17 ஆண்டுகளில் 13 பிரதமர்களை நேபாளம் கண்டுள்ளது.
தற்போது 3வது முறையாக கே.பி.ஷர்மா ஒலி நேபாள நாட்டின் பிரதமராக பதவியில் உள்ளார்.
கடந்த பிப்ரவரி 19 நேபாள் குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அதை தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். மக்களும் பெருமை அளவில் அவருக்கு வரவேற்பு கொடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே, ராஷ்ட்ரிய பிரஜாதன்ந்த்ர கட்சி (ஆர்பிபி) என்ற அமைப்பு அரசில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் எனவும், மீண்டும் மன்னர்ச்சி வேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று நேபாள் தலைநகர் காத்மாண்டுவில், ஆர்பிபி உள்ளிட்ட மன்னராட்சியை ஆதரிப்பவர்கள் ஞானேந்திரா ஷாவின் படத்துடன், மீண்டும் மன்னராட்சி வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே பகுதியில், அரசு ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீசினர்.
இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
இந்த மோதலில் வீடு மற்றும் கட்டிடங்கள் தீக்கிரையாக்க பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து 3 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.