பாகிஸ்தானில் 182 பயணியருடன் ரயில்… சிறைபிடிப்பு! 20 வீரர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

பாகிஸ்தானில்ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், அப்பாவி பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் தீடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார்.