உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக்கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த தடையை வரவேற்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடையையும், சொத்து முடக்க அறிவிப்பும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் சிறிய நம்பிக்கையாகக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையைப் பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பது இப்போதாவது உணரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.