மாசிடோனியாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 51 பேர் பலி, 100 பேர் காயம்.

ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர்.
வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இது 1991ம் ஆண்டில் யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
வடக்கு மாசிடோனியாவின் வடமேற்கில் கொசோவோ, வடகிழக்கில் செர்பியா, கிழக்கில் பல்கேரியா, தெற்கில் கிரேக்கம், மேற்கில் அல்பேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 51 பேர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் பஞ்சே டோஷ்கோவ்ஸ்கி கூறியதாவது:
நாட்டின் கிழக்கு நகரமான கோக்கானியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 51 பேர் பலியானார்கள், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் பாப் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியின் போது அதிகாலை 2:35 மணியளவில் தீ விபத்து தொடங்கியது. இந்த கிளப்பிற்கு வந்த பார்வையாளர்கள் பட்டாசுகளை வெடித்ததால் தீப்பிடித்தது.
இந்த மிகவும் கடினமான தருணங்களில், அரசு, தேவவையான உதவியை செய்யும். இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரவு விடுதிக்குள் குழப்பம் நிலவுவதை வீடியோக்கள் காட்டுகின்றன, பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஹ்ரிஸ்டிஜன் மிக்கோஸ்கி கூறுகையில்,
இது மாசிடோனியாவிற்கு ஒரு கடினமான மற்றும் மிகவும் சோகமான நாள். பல இளம் உயிர்களை இழந்தது ஈடுசெய்ய முடியாதது, மேலும் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களின் வலி அளவிட முடியாதது என்று கூறியுள்ளார்.