சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களான நிலையில், மியான்மரில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மக்களை பெரிதும் அச்சமடைய வைத்துள்ளது. ஒரு பக்கம் வெயில் கொளுத்தும் நிலையில், எங்கும் பிணவாடை வீசுவதால், மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் சில கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே நகரங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.
பல உயர்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்து, எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்களாக காட்சி அளிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களில், ஏழு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலையில், மண்டாலே பகுதியில், நேற்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், மக்கள் அலறியடித்தபடி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
வீடுகள் இடிந்து விழுந்தது, தொடர்ந்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளால், பெரும்பாலான மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிக்கு கனரக வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.
பெரும்பாலான பகுதிகளில், அந்தந்தப் பகுதி மக்களே, கைகளாலும், சிறிய கருவிகளாலும், இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். மீட்புப் படையினர், ராணுவத்தினர் பல இடங்களுக்கு இன்னும் செல்ல முடியவில்லை.
இதனால், இந்த இரண்டு பெரிய நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.
மின்சாரம் துண்டிப்பு, தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிப்பு ஆகியவை, மீட்புப் பணிகளை வேகப்படுத்த முடியாத நிலையை உருவாக்கிஉள்ளன.
முக்கிய விமான நிலையங்களிலும் நிலநடுக்கத்தால் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் வருவதில் தாமதத்தை ஏற்படுத்திஉள்ளது.
இதற்கிடையே, மியான்மரில் கோடை வெப்பம் தகிக்கிறது. நேற்று அங்கு 41 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. கான்கிரீட் இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாததால், மண்டாலே, நய்பிடாவ் நகரங்களில் சாலைகளில் பிணவாடை வீசுகிறது.
ஏற்கனவே, 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதைத் தவிர, பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என, கணித்துள்ளது.
மேலும், அடுத்த சில நாட்களில், அதிகளவு நில அதிர்வுகளும், சற்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.
மியான்மரில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், பல ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடந்துள்ளது.
இந்த ஆயுதக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு, ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் நுழைய முடியவில்லை.
தற்போதைய நிலையில், தலைநகர் நய்பிடாவ், இரண்டாவது பெரிய நகரமான மண்டாலே ஆகியவற்றில் மட்டுமே மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற இடங்களில் உள்ள நிலவரம் குறித்து தகவல்கள் இல்லை.
330 அணுகுண்டு சக்தி!
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பது, 330 அணுகுண்டுகள் வெடிக்கும் போது வெளியாகும் சக்திக்கு இணையானது என, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல புவியியல் ஆய்வாளர் ஜெஸ் போனிக்ஸ் கூறியுள்ளார். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மேலும் சில காலமாகும். அடுத்த சில மாதங்களுக்கு இங்கு அவ்வப்போது, நில அதிர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.’டெக்டானிக் பிளேட்’ எனப்படும், பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் அதாவது அடுக்குகள் நகரும்போது, நிலநடுக்கம், பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன.மியான்மரில் பூமிக்கு அடியில் உள்ள இந்தியத் தட்டு, யூரோசியா தட்டுடன் மோதியதால் தான், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இவ்விரு தட்டுகளும் மோதிக் கொள்வது, மேலும் சில காலத்துக்கு தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.