News

வெனிசுலாவிடம் பெட்ரோல் வாங்கினால் வரி: அமெரிக்கா அறிவிப்பால் இந்தியாவுக்கு சிக்கல்

 

வாஷிங்டன்: வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக, 25 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப், தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குடியேற்றம் மற்றும் அகதிகள் பிரச்னையில் தீவிரமாக உள்ளார்.

இதைத் தவிர, அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் அதே அளவுக்கு வரி விதிப்பதாகவும் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்காத அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகியவற்றுக்கு அதிக வரி விதிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வரி விதிப்புகள் அனைத்தும், ஏப்., 2ல் இருந்து நடைமுறைக்கு வரப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடான வெனிசுலா, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள தங்கள் நாட்டவரை திரும்பப் பெறுவதில் முரண்டு பிடித்துள்ளது. அமெரிக்கா திருப்பி அனுப்பிய விமானங்களை ஏற்க மறுத்துள்ளது. இதனால், வெனிசுலா மீது டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு, ஏற்கனவே விதிக்கப்படும் வரிகளைவிட, கூடுதலாக, 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என, டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். வரும், ஏப்., 2 முதல் இது அமலுக்கு வருவதாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலாவிடம் இருந்து அதிகளவு பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உட்பட பல நாடுகளும் வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்குகின்றன. டிரம்பின் இந்த அறிவிப்பால், வரி போர் ஒரு பக்கம் நடந்தாலும், பெட்ரோலியப் பொருட்கள் வினியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

வெனிசுலா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடை விதித்திருந்தது. அது விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் 2023ல் இருந்து தான் அந்த நாட்டிடமிருந்து இந்தியா பெட்ரோலியப் பொருட்களை வாங்குகிறது.

கடந்தாண்டில், 2.2 கோடி பேரல், பெட்ரோலியப் பொருட்கள் அந்த நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில், 1.5 சதவீதமே. கடந்தாண்டு ஜனவரியில் மட்டும் நாளொன்றுக்கு, 2.54 லட்சம் பேரல்கள் வாங்கப்பட்டன. இது வெனிசுலாவின் ஒரு நாள் மொத்த ஏற்றுமதியில், 50 சதவீதமாகும்.

அதன் பின், இந்த அளவு குறைந்து வந்துள்ளது. அதுபோல, பெரும்பகுதியை, ரிலையன்ஸ் உட்பட தனியார் நிறுவனங்களே வாங்கி வருகின்றன.

இந்தியா தற்போது நாளொன்றுக்கு, 45 லட்சம் பேரல்கள் வாங்குகிறது. கடந்த ஜனவரியில் வெனிசுலாவிடம் இருந்து, நாளொன்றுக்கு, 65,000 பேரல்கள் வாங்கப்பட்டன. ஒட்டுமொத்த கொள்முதலில் வெனிசுலாவிடம் இருந்து வாங்குவது மிகவும் குறைவே.

அதனால் டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top