டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் அதிருப்தி கிளம்பியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்பின் நடவடிக்கைக்கு உள்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டிரம்ப் விதித்த பரஸ்பர விதிப்பு காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,அமெரிக்கர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால் டிரம்ப் மற்றும் எலான்மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்து உள்ளது.
மன்ஹாட்டன் முதல் அலாஸ்காவின் ஆங்கரேஜ் வரை, பல மாகாண தலைநகரங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் டிரம்புக்கு எதிரான கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு வேலைகளில் ஆட்குறைப்பு, பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து முழக்கமிட்டனர். கைகளில், கண்டன பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ” டிரம்பின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை அவர் எப்போதும் பாதுகாப்பார். ஜனநாயக கட்சியினரின் நிலைப்பாடு சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினருக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி வழங்குவதாகும். அது இந்தத் திட்டங்களை திவாலாக்கி அமெரிக்க குடிமக்களை நசுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.