இந்தியாவில் (India) நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் இன்று (19.04.2025) அதிகாலை 3.00 மணியளவில் டெல்லியில் முஸ்தபாபாத் நகரில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி (Delhi) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டபோது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை மோப்ப நாய்களின் உதவியுடன் கட்டடத்தினுள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் இடிந்து விழுந்த கட்டடத்தில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை.
விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.