அண்மைக்காலமாக தென்னிலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர் கொல்லப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இடையிலான பழிவாங்கல் நடவடிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மறுபுறத்தில் அரசியல் ரீதியான படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
சமகால அநுர அரசாங்கம் கடந்த கால ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையை காப்பாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு இது பாரியதொரு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு பல்வேறு குற்றச்செயல்களை செய்த நபர்களை கொலை செய்யும் படலம் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமையவாக ராஜபக்சர்களுக்கு நெருக்கமானரும், பல ரகசியங்களை அறிந்து வைத்திருந்த அருண விதானகமகே என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருடன் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான அருண விதானகமகே, பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமானவரும், இனவாத சிந்தனையும் கொண்ட டான் பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மீதொட்டுமுல்ல லக்சந்தசெவன அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில், டான் பிரசாத் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருந்தது.
அநுர அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் பிரதான சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டாக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமான அரங்கல மீதான வன்முறை தாக்குதல் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலை ராஜபக்சர்களின் உத்தரவுக்கு அமைய டான் பிரசாத் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் பல காணொளி ஆதாரங்களும் உள்ளன.
இவ்வாறான நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது ராஜபக்சர்களுக்கு வாழ்நாள் ஆபத்தாக மாறும், கூண்டோக சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இவ்வாறான பின்னணியில் டான் பிரசாத் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கும் ராஜபக்சர்களின் அச்சத்திற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமக்கு எதிரான சாட்சியங்களை திரைமறைவில் ராஜபக்சர்கள் அழித்து வருவதாகவே அரசியல் மட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, தென்னிலங்கையில் தமிழர்சார் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடங்களில் வன்முறையில் ஈடுபட்டமை, சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, போதைப்பொருள் கடத்தல், அதிகார துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டான் பிரசாத் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.