News

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் மேலும் 50 பலஸ்தீனர்கள் பலி

 

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு காசாவின் ஜபலியாவில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களின் கட்டளை மையம் ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சந்தை ஒன்றுக்கு அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தின் மீது இரு ஏவுகணைகள் தாக்கியதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எனினும் கொல்லப்பட்டவர் விபரம் உடன் வெளியாகவில்லை என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் கட்டளை மையம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அங்கு இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் காசாவில் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வீடு ஒன்று தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் அதில் வசித்த தம்பதியர் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரே குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் கூடாங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் ஐவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 152 பேர் காயடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கணிசமான உடல்கள் இடிபாடுகள் மற்றும் வீதிகளில் இருப்பதாகவும் அவைகளை மீட்பதற்கு அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் அடைய முடியாதிருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஆரம்பமான காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51,355 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,248 பேர் காயமடைந்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டபோதும் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. போரை முடிவுக்குக் கொண்டுவருதவதற்கு ஹமாஸ் தரப்பு முயன்று வரும் நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரி வருகிறார்.

இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் முறிந்த நிலையில் கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் காசாவில் மீண்டும் பயங்கர தாக்குதல்களை ஆரம்பித்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம்; 1,978 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 5,207 பேர் காயமடைந்துள்ளனர்.  காசாவுக்கான உதவிகளை சுமார் கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேல் முடக்கி இருக்கும் சுழலில் அங்கு பட்டினி நிலை அதிகரித்து வருகிறது. மா மற்றும் ரொட்டிகளுக்கு பற்றக்குறை இருப்பதால் எஞ்சியுள்ளவை உயிர்வாழ்வதற்கு போராடும் குடும்பங்கள் இடையே கவனமாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

‘எல்லைகள் மூடப்பட்டதன் காரணமாக, எரிவாயு, மா மற்றும் விறகுகள் எதுவும் வருவதில்லை’ என்று தன்னார்வ உதவிப் பணியில் ஈடுபடும் உம் முஹமது இஸ்ஸா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசா பகுதியை இஸ்ரேல் கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் முடக்கி இருக்கும் நிலையில் பாரிய மனிதாபிமான நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

காசாவில் பஞ்சம் ஒன்று வரப்போகிறது என்று இஸ்ஸா குறிப்பிட்டார்.

‘எமது குழந்தைகளுக்கு தொடர்ந்தும் உணவு அளிக்க முடியாத நிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஹமாஸ் அமைப்பை ‘நாய்கள்’ என்று குறிப்பிட்டதற்கு பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை அந்த அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. காசாவில் உள்ள எஞ்சிய இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்படி வலியுறுத்தியே அப்பாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

அப்பாஸின் இந்த கருத்து அவமதிப்பதாக உள்ளது என்று மூத்த ஹமாஸ் அதிகாரி பசம் நயீம் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன அதிகாரசபைக்கு இடையே கடந்த காலங்களில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top