கொலம்பியாவில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிரித்தானியா உயிரியல் விஞ்ஞானி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜியின் (RSB) முன்னாள் விஞ்ஞானி அலெசாண்ட்ரோ கோட்டி(Alessandro Coatti) கொலம்பியாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவின் வடக்கு கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான சாண்டா மார்டாவில் கோட்டியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது சில எச்சங்கள் கருப்பு நிற சூட்கேஸில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
மறைந்த அலெசாண்ட்ரோ கோட்டி லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜியில் எட்டு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
இந்த பயங்கரமான குற்றத்திற்கு காரணமான குற்றவாளிகளைப் பிடிக்க உதவுபவர்களுக்கு சாண்டா மார்டா நகர மேயர் கார்லோஸ் பினேடோ குல்லோ சுமார் 7.5 லட்சம் (சுமார் £9,000) வெகுமதி அறிவித்துள்ளார்.
தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்த மேயர் பினேடோ குல்லோ, இந்த குற்றம் “நிச்சயமாக தண்டிக்கப்படும்” என்றும், குற்றவாளிகள் “நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் வரை” அவர்களை விடாப்பிடியாக தேடுவோம் என்றும் உறுதியளித்தார்.