ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்த்திய புலம்பெயர்ந்தோர் ஒருவரை பொலிசார் சுட்டுப் பிடித்தனர்.
ஆனால், அவர் தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று, 43 வயதுடைய சிரிய நாட்டவர் ஒருவர் 29 வயதுடைய ஜேர்மானியர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
மேற்கு பெர்லினிலுள்ள Sophie-Charlotte-Platz ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்த அந்த நபர் தானாகவே ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயன்றுள்ளார்.
ஆனால், சிறிது தூரம் செல்வதற்குள்ளேயே அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார்.
தாக்குதல்தாரி தப்பியோட முயல, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளார்கள்.
காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமாகவே, அறுவை சிகிச்சை ஒன்றையும் செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிரியா நாட்டவரான அந்த நபர் மீது, ஏற்கனவே பொலிசாரை தாக்கியது உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.