கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடு களுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்கு னர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறும்போது, கேளிக்கை விடுதியின் மூன்று பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப்பணி நடந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி மக்களைத் தேடுகிறோம் என்றார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.