0% buffered00:00Current time00:00
News

தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக விடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை அழைப்பு

தையிட்டியில் சட்ட விரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (04.01.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நீதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ் நாக விகாரையில் அவ் விகாரையின் தலைமைப்பிற்கு மற்றும் சமய தலைவர்கள் நீதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்போடு தையிட்டியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை காரணமாக பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது சமய பிரச்சினையாக உருவேற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது தமிழர்களின் தேசிய அரசியல் சார்ந்த பிரச்சனை. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட விகாரை மற்றும் மட ஆலயத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் தமிழர்களிடமும் அரசும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மன்னிப்பு கோருவதோடு தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி உறுதிப்படுத்தப்படுதலும் வேண்டும்.

அதுவே சமய மற்றும் இன நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும். படையினர் தமது இராணுவ வரையறைகளுக்கு அப்பால் சென்று நாட்டின் சட்டத்தையும் மீறி அரச வளங்களையும், தனியார் வளங்களையும் உபயோகித்து இன மற்றும் சமய முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையோடு தையிட்டியில் விகாரை எழுப்பியுள்ளதோடு அதனை மேலும் பலப்படுத்த மடாலயத்தையும் கட்டியுள்ளனர்.

கட்டிட மற்றும் நாட்டின் சட்ட நெறிமுறை தவறிய குற்றவாளிகள், இதற்கு அனுமதி அளித்த அரசியல் தலைமைகள், துணை நின்ற பேரினவாத சக்திகளை நீதி முன் நிறுத்த திராணியற்ற அரசும் நீதி அமைச்சரும் சமய நல்லிணக்கம் எனும் போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே.

அதுவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கையில் அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சியாகவே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது எனலாம்.

அத்தோடு இதயச் சுத்தியோடு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி ஆட்சியாளர்கள் பயணிக்க விரும்புகிறார்கள் இல்லை என்பதையுமே வெளிபடுத்துகின்றது. இது சாதாரண மக்களை அழைத்து அரசியல் பம்மாத்து காட்டும் வெளி வேடமே” என்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top