News

பெய்ரூட்டில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதல்; நால்வர் பலி

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இஸ்ரேல் நேற்று (01) நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நான்கு மாதங்கள் நீடிக்கும் போர் நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அண்மையில் ஹமாஸ் செயற்பாட்டாளர்களை இயக்கி அவர்களுக்கு உதவிய ஹிஸ்புல்லா போராளி ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் கோட்டை என அழைக்கப்படும் லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சில நாட்களிலேயே இந்த புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்தத் தாக்குதலை கண்டித்திருக்கும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், லெபனானுக்கு எதிரான முன் திட்டமிட்ட நோக்கங்களை குறிக்கும் ‘அபாயகரமான எச்சரிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், லெபனான் தனது முழு இறையாண்மைக்கு ஆதரவாக இராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளை அணிதிரட்ட வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் கட்டடம் ஒன்றின் மேல் மூன்று மாடிகள் சேதமடைந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதோடு தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் குடும்பங்கள் பெய்ரூட்டின் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றிருப்பதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் எட்டப்பட்ட போர் நிறுத்தம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்ல இடையே ஓர் ஆண்டு காலம் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாக இருந்தது. எனினும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி லெபனானிலும் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த போர் நிறுத்தம் மேலும் பலவீனம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top