எல்லை பகுதிகளான பிரையான்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கராட் உள்ளிட்ட மண்டலங்களில் எதிரி படையினர் தாக்குதல்களை நடத்தினர் என ரஷியா தெரிவித்து உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ரஷியா, 30 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை அறிவித்து இருந்தது. இதன்படி, தாக்குதலுக்கு தற்காலிக தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இரவில் 48 ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது என ரஷிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதுபற்றி வெளியான எக்ஸ் பதிவில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடும்போது, கிரீமியா பகுதி உள்பட ரஷிய நிலைகளை இலக்காக கொண்டு துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் 444 முறை உக்ரைன் படைகள் தாக்கின என தெரிவித்து உள்ளது.