News

மியன்மார் பூகம்பம்: உயிரிழப்பு 3,000 ஐ நெருங்கியது

 

மியன்மார் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டி இருக்கும் நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக முகாம்கள், உணவு மற்றும் நீர் அவசர தேவையாக இருப்பதாக உதவிக் குழுக்கள் வலியுறுத்தியபோதும் நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் அவைகளை விநியோகிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 3,000ஐ தாண்டும் என அஞ்சுவதாக மியன்மார் இராணுவ தளபதி மின் அவுங் ஹிலைங் நேற்று (01) கூறினார். இதில் 4,521 பேர் காயமடைந்திருப்பதாகவும் 441 பேர் காணாமல்போயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகல் நேரத்தில் 7.7 ரிச்டர் அளவில் தாக்கிய இந்த பூகம்பம் மியன்மாரில் கடந்த நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் பதிவான சக்திவாய்ந்த பூகம்பமாக இருந்தது. இதனால் அந்நாட்டின் பண்டைய கட்டடங்கள் மற்றும் நவீன கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன.

அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள வானளாவிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் உயிர் தப்பியோரை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் காலம் தாமதித்திருக்கும் நிலையில் உயிர் தப்பியோரை மீட்கும் எதிர்பார்ப்பு குறைந்து வருகிறது.

மியன்மாரின் மன்டலே பகுதியில், பாலர் பாடசாலை ஒன்று இடிந்து விழுந்ததில் 50 சிறுவர்கள் மற்றும் இரு ஆசிரியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், சுத்தமான நீர் மற்றும் துப்புரவு ஏற்பாடுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு மக்கள் போராடி வருகின்றனர். அதேநேரம் உயிர்தப்பியவர்களை கண்டறிவது மற்றும் உயிர்காப்பு உதவிகளை வழங்குவதில் அவசர உதவிக் குழுக்கள் ஓய்வின்றி செயற்பட்டு வருகின்றன’ என்று அந்த ஐ.நா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள மன்டலே போன்ற இடங்களில் தற்காலிக முகாம், உணவு, நீர் மற்றும் மருந்து அனைத்து உதவிகளும் தேவையாக இருப்பதாக சர்வதேச மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

‘பயங்கர பூகம்பத்தை கடந்து வந்த மக்கள் தற்போது, பிந்தைய அதிர்வுகளால் அச்சம் அடைந்திருப்பதோடு வீதிகள் மற்றும் திறந்த வெளிகளில் உறங்கி வருகின்றனர்’ என்று மன்டலேவில் உள்ள சர்வதேச மீட்புக் குழு பணியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் இராணுவம் சதிப்புரட்சி மூலம் 2021 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் மீட்புப் பணிகளை பாதித்துள்ளது. இராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு உதவிகள் செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.   இராணுவ அரசு தொடர்பாடல் கட்டமைப்பை கட்டுப்படுத்துவதோடு பூகம்பத்தால் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்கள் உதவிகளை வழங்குவதில் தொண்டுப் பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்டுத்தியுள்ளது.

பூர்த்தி செய்யப்படாத வானளாவிய கட்டடம் ஒன்று தரைமட்டமான நிலையில் பாங்கொக்கில் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர் தப்பியவர்களை தேடும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றபோதும் நாட்கள் செல்லச் செல்ல அந்த எதிர்பார்ப்பு குறைந்துள்ளது.

‘சுமார் 70 சடலங்கள் இடிபாடுகளில் இருக்கலாம்… அதிசயமாக ஓரிருவர் உயிருடன் இருப்பார்கள் என நாம் நம்புகிறோம்’ என்று தன்னார்வ தொண்டுக் குழு தலைவர் பின் பன்லுரிட் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்தத் தளத்தில் பதின்மூன்று பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிந்தபோதும் 74 பேர் தொடர்ந்து காணமல்போயுள்ளனர். இந்த பூகம்பத்தில் தாய்லாந்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top