News

ரஷ்யா – -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு

 

பாரிஸ்: ரஷ்யா – -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டிரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை துவங்கினார்.

இதற்காக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு பிப்ரவரியில் அழைத்துப் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின், ஜெலன்ஸ்கி சமாதானமாகி பேச்சுக்கு ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அமெரிக்காவின் முயற்சியால் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் ரஷ்யா — உக்ரைன் உயர் அதிகாரிகள் இடையே பல சுற்று அமைதிப்பேச்சு நடந்தது.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் நெருங்கிய உதவியாளர் ஸ்டீவ் விட்காப் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும், கடந்த வாரம் ரஷ்யா சென்ற ஸ்டீவ் விட்காப், ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேசினார்.
அமைதி ஒப்பந்தப்படி, உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா எடுத்துக் கொள்ள விரும்புகிறது. அடுத்த வாரம் அல்லது மே மாதத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமென டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தத்துக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்கின்றன.

இதற்கிடையே, ரஷ்யாவுக்கு ராணுவ உதவியை சீனா வழங்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டினார்.

இந்த சூழலில், அமைதி பேச்சுக்கான மத்தியஸ்த முயற்சியை கைவிடப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஐரோப்பா மற்றும் உக்ரைன் நாடுகளின் உயர்மட்ட தலைவர்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் பாரிசில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது மார்கோ ரூபியோ கூறுகையில், “அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. எனவே, எந்த முன்னேற்றமுமின்றி, அமைதி பேச்சை மாதக்கணக்கில் நாங்கள் தொடரப்போவதில்லை.

“போர் நிறுத்தம் குறித்து விரைவாக தீர்மானிக்க வேண்டும். அது சாத்தியம் என்றால் மட்டுமே, அதிபர் டிரம்ப் அதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தொடர்வார். இல்லாவிட்டால், இன்னும் சில தினங்களில், ரஷ்யா — உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்,” என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top