News

ராணுவ தளவாடங்களுடன் பாகிஸ்தானில் தரையிறங்கிய துருக்கி போர் விமானங்கள்

 

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு – -காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ரத்து என ஏராளமான தடைகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நம் எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகளை பாக்., குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், நம் நாட்டின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் – 17 ஆகிய ரகங்களைச் சேர்ந்த போர் விமானங்களை பாக்., நிறுத்தியுள்ளது.

குறிப்பாக, ஸ்கார்டு விமானத் தளத்தில் கூடுதல் போர் விமானங்களையும், ராணுவ தளவாடங்களையும் இறக்கும் வகையில், ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, ராணுவ ரீதியாக சீனா உதவுகிறது. பாக்., சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் வலுவான பாதுகாப்பு உடன்படிக்கை செய்துள்ளன. அதன்படி, துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கி வருகிறது.

பாக்.,கின் கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான ‘சி -130 ஹெர்குலிஸ்’ போர் விமானம் சென்றது.

அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுபோல, இஸ்லாமாபாத் விமானப்படை தளத்துக்கும், ஆறு ‘சி -130 ஹெர்குலிஸ்’ ரக போர் விமானங்களை துருக்கி நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போர் விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ தளவாடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top