உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகை தொடர்பாக, அமெரிக்கா – உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஐரோப்பிய நாடுகளும், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் நிலைமை மாறியது. உக்ரைனுக்கு உதவிகளை நிறுத்தினார். போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதுவரை அமெரிக்கா செய்த உதவிகளுக்கு விலையாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு தரும்படி டிரம்ப் நிர்பந்தம் செய்தார்
இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின், உக்ரைனில் உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் நேற்று முன்தினம் கையொப்பமிட்டன.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், “ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைனுக்கு அளித்ததை விட அவர்களிடம் இருந்து அதிகம் பெற்றுள்ளோம். செய்த முதலீட்டுக்கான பலன்களை பெறாமல் இருக்க அமெரிக்கா முட்டாள் அல்ல,” என்றார்.
அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கியதற்கு பிரதிபலனாக, போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தர அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது