காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.