இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஏமன் நாட்டின் மீது விமானங்கள் வாயிலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் – பாலஸ்தீன போரை மேலும் நீட்டிக்கவும், காசா முனை மீதான தாக்குதலை தொடரவும், இஸ்ரேல் அமைச்சரவை தங்கள் நாட்டு ராணுவத்துக்கு சமீபத்தில் அனுமதி அளித்தது.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஈரான் நாட்டின் ஆதரவில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள், இஸ்ரேல் நாட்டின், பென் – குரியான் சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஏமன் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், இஸ்ரேல் விமான நிலையத்திற்கு செல்லும் சாலை ஒன்றில் விழுந்து வெடித்தன. இதில், நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், ஏமன் நாட்டின் மீது விமானங்கள் வாயிலாக நேற்று முன்தினம் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில், அந்நாட்டின் சிவப்பு கடல் பகுதியில் உள்ள முக்கிய துறைமுகமான ஹோடெய்டா மற்றும் அங்கிருந்து, 55 கி.மீ., தொலைவில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை சேதமடைந்தன. இதில், ஒருவர் கொல்லப்பட்டார்; 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இன்னும் சிலரை காணவில்லை. இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.