காசாவில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்திருப்பதோடு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்களாவர்.
காசாவில் இஸ்ரேல் உதவிகளை முடக்கி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் அங்கு கடும் உணவு பற்றாக்குறை நிலவும் சூழலிலேயே தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அல் புரைஜ் அகதி முகாம் மற்றும் காசா நகரில் உள்ள இரு பாடசாலைகளை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் நேற்று அதிகாலையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் அல் புரைஜ் அகதி முகாமில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அபூ ஹமிஸா பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 73 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இதன்போது இந்தப் பாடசாலை இரு முறை இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா நகரின் கிழக்கே உள்ள அல் கரமா பாடசாலை மீது நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என வபா செய்தி நிறுவனம் கூறியது.
அதேபோன்று வடக்கு காசாவின் ஜபலியா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள மற்றொரு வீட்டின் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலில் தந்தை, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஐவர் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இரண்டு மாத போர் நிறுத்தம் முறிந்ததை அடுத்து இஸ்ரேல் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி உள்ளது. இதில் ரபா நகரின் எகிப்து எல்லையை ஒட்டிய பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை வெடி வைத்து தகர்த்து வருவதாக குடியிருப்பாளர்கள் மற்றும் ஹமாஸ் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட நிலப்பகுதியை இஸ்ரேல் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. அங்கு இஸ்ரேல் உருவாக்கி வரும் பாதுகாப்பு வலயங்கள் என்று குறிப்பிடப்படும் பகுதியில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு கட்டடங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசாவில் தாக்குதலை விரிவுபடுத்துதவற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்போது ஒட்டுமொத்த காசா பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்ற திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று காசாவுக்கான உதவி விநியோகங்களையும் இஸ்ரேல் கட்டுப்படுத்த திட்டமிடுவதோடு ரபா நகர் புதிய மனிதாபிமான வலயமாக மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவுக்கான உதவி விநியோகங்களை கடந்த மார்ச் 2ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் அங்கு உணவு விநியோகங்கள் முற்றாக தீர்ந்துவிடும் நிலையை எட்டி இருப்பதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
அனைத்து வகையான உதவிகளும் தீர்ந்திருப்பதாகவும் ரொட்டி மாத்திரமே எஞ்சி இருப்பதாகவும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவன முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கும் ஆறு குழந்தைகளின் தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்ரேல் இந்த முற்றுகைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘இந்த மனிதாபிமானப் பேரழிவு முன்னர் காணாத புதிய நிலை ஒன்றை அடைவதைத் தடுக்க ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி வேண்டும்’ என்று அது வலியுறுத்தியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்திருக்கும் நிலையில் மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வரும் எகிப்து மற்றும் கட்டார் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஒன்றை கையாள்வதற்கு தொடர்ச்சியான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் காசாவில் மனிதாபிமான நெருக்கடியை தீர்ப்பதை உறுதி செய்யும் வகையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து எகிப்து மற்றும் கட்டார் முயற்சி மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யெமன் தலைநகர் சனாவின் பிரதான விமான நிலைத்தின் மீது இஸ்ரேல் நடத்திய உக்கிர தாக்குதலில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று சிவில் விமானங்கள், புறப்பாடு மண்டபம், ஓடுபாதை மற்றும் இராணுவ விமானத் தளம் ஒன்றை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக விமானநிலைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் விமானநிலையம் முற்றாக அழிந்திருப்பதாக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். இதில் குறைந்தது மூவர்கொல்லப்பட்டதாகவும் பதிலடி நடத்தப்படும் என்றும் ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறம் ஹூத்திக்கள் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. யெமனில் ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசுவதை அமெரிக்கா நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் முக்கிய கப்பல் பாதைகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்துவதற்கு அந்தக் குழு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தப் போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் உள்ளடக்கப்படவில்லை என்று ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.