முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கனேடிய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சகல நடவடிக்கைகளையும் ஈழத் தமிழர்கள் பெரு அவாவுடன் வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 2009 யுத்த களத்தில் இடம்பெற்றது தமிழினப் படுகொலை என்பதை கனேடிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்தியதுடன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இனப்படுகொலை வாராமாக அனுஷ்டிக்கின்றது.
தமிழினப் படுகொலை தொடர்பான வரலாறுகளை மாணவர்களுக்கு தெளிவூட்டல் என்னும் வேலைத் திட்டம் அத்துடன் தற்போது பிரம்டன் நகரசபைப் பகுதியில் தமிழினப்படுகொலை நினைவகம் எனப்படும் தூபி அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மிகப் பெரும் பக்க பலமாக கனேடிய அரசு செயற்படுகிறது.
பிரம்டன் நகர பிதா பட்ரிக் ப்றவுண் ஆற்றிய உரை தமிழினப் படுகொலையை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொழும்பு செல்லுங்கள் கனடாவில் இடமில்லை என பொது வெளியில் உரையாற்றியமை உண்மை தான் தமிழர் தாயக மக்களும் இனப்படுகொலை இல்லை அல்லது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழினப் படுகொலை நடைபெறவில்லை என தெரிவிக்கும் எவரையும் தாயக அரசியல் அரங்குக்குள் அனுமதிக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து ஈழத் தமிழர்களும் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழினப் படுகொலைக்கான நீதியின் கதவுகள் திறப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும், கனேடிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஔிக்கீற்றை காட்டுகின்றது” என தெரிவித்தார்.