News

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச நீதிக்கு மீண்டும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த அதிகாரிகள், சர்வதேச நீதிக்கான அழைப்புகளை மீண்டும் விடுத்துள்ளனர்.

போர்க்கால அட்டூழியங்கள் மற்றும் தமிழ் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துஸ்பிரயோகங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.

இதன்படி, ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் கொல்லப்பட்ட, காணாமல் போன மற்றும் சித்திரவதைக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு நீதி வழங்க அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறியதைக் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி கண்டித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அது நீண்டகாலமாக தமிழர்களை குறிவைத்து செயல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பதவியில் சில தமிழர்கள் எச்சரிக்கையான நம்பிக்கையை வைத்திருந்தாலும், அந்த நம்பிக்கை ஏற்கனவே மங்கிவிட்டதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

புதிய முயற்சிகளைத் தொடர்வதற்குப் பதிலாக, அநுரகுமார திசாநாயக்க காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற தோல்வியுற்ற வழிமுறைகளுக்கு தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளமையை, இதற்கான காரணங்களாக மீனாட்சி குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட உள்நாட்டு முயற்சிகள் செயல்படுவதாக நடிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் பொறுப்புக் கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் பெண்கள் மீதான மோதலின் ஆழமான மற்றும் தொடர்ச்சியான தாக்கங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மகளிர் உரிமைகள் பிரிவின் துணை இயக்குநர் ஸ்டேசி-லீ இமானுவல் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

2009இல் போர் முடிவடைந்த போதிலும், போர்க்கால பாலியல் வன்முறைக்கு வழிவகுத்த கட்டமைப்பு தண்டனையின்மை மாறாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெண் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மற்றும் பிற தமிழ் பெண்கள் அரச படையினரால் பிடிக்கப்பட்டு, பாலியல் ரீதியாக சிதைத்து, கொல்லப்பட்டனர் என்று இமானுவல் குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top