Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce பெருநகராட்சி மன்றம், மே 18-ஐ தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்கும்
தீர்மானத்தை அதிகாரபூர்வமாக நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானம், தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கல்வி மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை
ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மே 18ஆம் நாள் – இழந்த அப்பாவி உயிர்களின் நினைவைப் போற்றவும், அவர்களின் கதைகள் மற்றும் மீள்தன்மைக்கு சாட்சியமளிக்கவும்
உலகளவில் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக நினைவுகூரப்படவுள்ளது.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், கனடா முழுவதிலும் மற்றும் உலகளாவிய தமிழ்ச் சமூகத்திற்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பல ஆண்டுகளாக, தமிழர் இனப்படுகொலைக்கு நீதியும் அங்கீகாரமும் வேண்டும் எனத் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த அங்கீகாரம், தமிழர்களின் துயரங்களைக் களையக்கூடிய முக்கியமான படிநிலையாகும். “இத்தீர்மானம் சாத்தியமாகக் காரணமாக இருந்த,
சுபிதா தர்மகுலசேகரம் தலைமையில் செயலாற்றிய மொன்ரியல் தமிழ்ச் சமூகத்தின் உறுதியான தலைமையையும்,
இடையறாத போராட்டத்தையும் நான் மனமாரப் பாராட்டி அங்கீகரிக்க விரும்புகிறேன்” என ஒன்ராறியோ மாநில சுகாதார அமைச்சின்,
உளநலத் துறையின் இணை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2009 மே மாதம், இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக கிளஸ்டர் குண்டுவீச்சுகள், கடத்தல்கள், பாலியல் வன்கொடுமைகள்,
படுகொலைகள் மற்றும் உணவு, மருந்துகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி இனவழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்தது.
எதிர்வரும், மே 12 முதல் 18 வரை, ஒன்ராறியோ முழுவதும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை ஒன்ராறியோவிலுள்ள அனைத்துக்
கல்விச்சபைகளிலும் அனுசரிக்கப்படும்.
தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை, நடைபெற்ற தமிழின அழிப்பை அங்கீகரிக்கவும், இழந்த உயிர்களை நினைவுகூரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கவும்,
அவர்களின் உளநல ஆற்றுப்படுத்தலுக்கான செயல்முறையைக் கொண்டுவரவும் உதவுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளில்
தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை அங்கீகரித்த முதல் அரச கட்டமைப்பு ஒன்ராறியோ மாநிலமாக விளங்குகின்றது.