இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்க மாட்டார் என்று உக்ரைனின் அரசாங்க சார்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் செய்தித்தாள் ஒன்று, புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ், பேச்சுவார்த்தையில் மாஸ்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறியதையடுத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கியில் கீவ் மற்றும் மொஸ்கோ இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்தார்.
இதனையடுத்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகக் கூறியிருந்தாலும் , புடின் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிரெம்ளின் இதுவரை அமைதியாக இருந்து வருகிறது.
மாஸ்கோ தனது குழு உறுப்பினர்களின் பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதன்படி துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை அங்காராவில் சந்திப்பதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் புடின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டால் தானும் எர்டோகனும் இஸ்தான்புல்லுக்கு பயணிக்கத் தயாராக இருப்பதாகக் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.