கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்கள் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை எதிர்ப்பது, இந்தக் குடும்பத்தால் இழந்த அப்பாவி பொதுமக்களை அங்கீகரித்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்று உறுதியாக இருந்தால், ராஜபக்ச குடும்பத்தினர் நீதியைத் தடுத்து வழக்குத் தொடராமல் ஒளிந்து கொள்வதற்குப் பதிலாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று மேயர் பெட்ரிக் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்குப் பதிலாக, இந்தக் குடும்பம் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட ஆடம்பரத்தில் ஒளிந்து கொள்வதானது வெட்கக்கேடானது என்றும் அவர் அந்த பதிவில் விமர்சித்துள்ளார்.
அத்துடன், ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள குற்றங்கள் போல்பொட் , ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர் மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடக் கூடியவை என்றும் பெட்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறான ஒரு குடும்பம் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவ சின்னம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசாங்கத்தின் அரசியல் ரீதியாக இயக்கப்படும் நடவடிக்கையாகத் தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியதை தொடர்ந்து பிராம்ப்டன் மேயரின் மேற்படி கருத்துகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.