நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கிய செய்தியொன்றைச் சொல்லி இருக்கின்றது. தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாயிலாக வழங்கிய வாய்ப்பு, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் கவனிக்கத் தக்க விடயமாக மாறியிருந்தது.
ஆனால் அதனைப் பிழையாக அநுர அரசு பயன்படுத்திய நிலையில், தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்து கடந்த கால ராஜபக்ச மற்றும் ரணில் அரசுகளுக்கு நிகரான வகையில் இயங்கியமை காரணமாகவே இம்முறை தேர்தலில் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளே விட்டு தாக்கும் யுத்த முறைக்கு நிகரான அரசியல் போராட்டத்தை ஈழ மக்கள் நடாத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ளுர் அதிகார சபைக்கான தேர்தல் கடந்த மே 06ஆம் நாளன்று இடம்பெற்றது. 341 உள்ளூராட்சி சபைகளில் 28 மாநகரசபைகள், 36 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் உள்ளிட்ட 339 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளைப் பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரபூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 2,258,480 வாக்குகளுடன் 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளபோதும் ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் அதிக உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றிய கட்சியாக இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி 307,657 வாக்குகளைப் பெற்று 377 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அத்துடன் தமிழரசு கட்சி 37 சபைகளில் முன்னிலை பெற்றுள்ளதுடன் அதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் என்பன உள்ளடங்குகின்றன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 79 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டு சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வடக்கு கிழக்கில் அதிகளவான ஆசனங்களை இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா பெற்றிருந்தார். வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் மீதான அதிருப்தி காரணமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த கோபம் அநுர அரசுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது. இதனால் யார் எனத் தெரியாதவர்களும் தகுதியற்றவர்களும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று எம்பிக்கள் ஆகினர். இது கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ் மக்களை இன்னமும் மோசமான நிலைமைக்குத் தள்ளியது. அத்தகைய கோமாளித்தனமான அரசியல் பிரதிநிதிகளின் கோமாளித்தனமான பேச்சுக்களால் சர்ச்சைகளும் நகைப்புமே விஞ்சின.
அத்துடன் கடந்த காலத்தில் இருந்த அரசுகளைப் போலவே அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளைத் தொடர்ந்தது. தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம் வழங்காமல் முதல் இடத்தை வழங்குவோம் என கடந்த காலத்தில் கூறிய ஜேவிபி ஆனையிறவு உப்புக்கு சிங்களத்தில் பெயர் சூட்டியது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, உப்பில் பெயரைப் பார்க்காமல் ருசியைப் பாருங்கள் என்று எகத்தாளமாகவும் அதிகாரமாகவும் வடக்கில் வந்துபேசினார். இன்றைய ஜனாதிபதி அனுர, கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர். ஆனால் தனது ஆட்சியில் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் தனது ஆட்சியைத் தொடர்ந்தார்.
தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலின் வாயிலாக அநுர அரசுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருந்தனர். ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் வந்து சண்டித்தனங்களை செய்வதும், பேரினவாத அரசியலை முன்னெடுப்பதுமென ஏமாற்று அரசியலைத் தொடர்வதுமாக தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியை அணிந்துள்ள ஜேவிபி அரசு தனது மெய்யான முகத்தை காண்பித்தது. தமிழ் மக்கள் நாடாளுளமன்றத் தேர்தலின் வாயிலாக தேசிய மக்கள் சக்திக்கு சந்தர்ப்பத்தை வழங்கி புலிகளின் இறங்கவிட்டுத் தாக்கும் பாணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடியை, அனுபவத்தை வழங்கி பாடத்தை புகட்டியுள்ளனர் என்று இதனை எடுப்பதா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் அநுர அரசுக்கு ஆதரவை வழங்கியபோது, அதனை தமிழ் தேசியத்தின் தோல்வியாக ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் சித்திரிக்க முற்பட்டனர். அத்துடன் அவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட ஆதரவைக் கொண்டு தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் ராஜபக்ச போன்ற இனவாதிகள் மேற்கொண்ட அரசியலைத் தொடர முற்பட்டமையின் தோல்வியாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தி தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளது.
அத்துடன் இந்தத் தேர்தல் தமிழ் தலைவர்களுக்கும் மக்கள் பாடத்தை புகட்டியுள்ளனர். தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்பதனையும் தன்னல அரசியலுக்காக, தலைமைத்துவப் போட்டிக்காக மோதிக்கொண்டால் தமிழ் தலைவர்களுக்கே தோல்வியைக் கொடுத்து பாடத்தைப் புகட்ட நேரிடும் என்பதும் இதில் உணர்ந்துகொள்ள வேண்டியதாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உள்ளுராட்சித் தேர்தலுக்கும் இடையில் இன்னொரு விடயமும் உணர்த்தப்பட்டுள்ளது.
சிங்கள மக்களுக்கும் சிங்கள தரப்புக்களுக்கும் ஈழத் தமிழர்கள் எதிரானவர்களல்லர் என்பதும் ஆகும். ஆனால் பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஈழ மண்ணில் இடமில்லை என்பதும் உணர்த்தப்பட்ட செய்தியாகும். இனத்தின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இரத்தம் சிந்தி உயிர்களை தியாகம் செய்து உன்னதமான விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில் நேர்மையான அரசியலைத் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் எமது உயிருள்ள நிலம் உணர்த்தியிருக்கிறது.