இந்தியா (India) – பாகிஸ்தான் (Pakistan) இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தில் மூன்று நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா தாக்குதல் மேற்கொண்டது.
இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் எங்களுடைய நண்பர்களான சீனா, துருக்கி, அசர்பைஜான் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவு வழங்க முன்வந்துள்ளன என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அரசு தினசரி அடிப்படையில் ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, சீனா, கட்டார் ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கின்றன எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.