வித்தியா படுக்கொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (13) வேலணை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.
குறித்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தினை சமூமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த நிலையில், இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்க துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன் கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை திறப்போம், பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என கோஷமிட்டு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கேட்டு பதிவுசெய்வதற்கு காவல்துறையினர் முனைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது படங்களை வேண்டுமானால் எடுக்குமாறும் பெயர்களை கூற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதுடன் இது எமக்கு மாத்திரமல்ல உங்களது வீட்டில் உள்ள பெண்களுக்கும் தான் ஏற்படும் பிரச்சினை எனவே இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் காவல்துறையினர் ஒரு கட்டத்துக்கு மேல் செயற்பட முடியாது ஓரமாக சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தை கூற அநுர அரசு காவல்துறையினரை வைத்து அடக்குகின்றது என்றால் ஏனைய விடயங்களுக்கு எவ்வாறு செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்கும் என கூறி மக்கள் தமது விசனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.