‘‘அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவர் முக்கியமாக வரி விதிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது. இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன.
இதனால் ஹாலிவுட் உட்பட திரைப்படத்துறை அமெரிக்காவிற்குள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும், எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அரசியலமைப்பால் அதிபராக 3வது முறை போட்டியிட தடைசெய்யப்பட்டுள்ளது. 3வது முறையாக போட்டியிடுவது குறித்து தான் தீவிரமாக யோசிக்கவில்லை. இது நான் செய்ய விரும்பும் ஒன்றல்ல. நான் ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகளும் சிறப்பாக செயல்படுவேன். இது குறித்து முடிவு எடுக்க சிறந்த குடியரசுக் கட்சிக்காரரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.
பலர் நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனக்கு இவ்வளவு வலுவான கோரிக்கைகள் ஒருபோதும் வந்ததில்லை. உங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரு துணைத் தலைவர் இருக்கிறார். ஜே.டி.வான்ஸ் அற்புதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான, புத்திசாலித்தனமான பையன். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.