News

ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று மூன்றாம் நாளாகவும் அமைதி வழியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களைக் கடந்தும் தமது காணி உரிமை தொடர்பில் அரச தரப்பினர் எவரும் அக்கறை செலுத்தாததால் மக்கள் கவலையுடன் சோர்வாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காணிகளை விடுவிக்க கோரி நேற்றுமுன்தினம் மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அந்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட காணிகளை சேர்ந்த வயோதிபர்கள் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்களின் என பல தரப்பினரும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.

ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கம் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top