இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் விமானி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு அறிவுறுத்தினர். எனவே விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் அதற்குள் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் சவுத் எண்ட் விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் அனைத்தும் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையே அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். அதேசமயம் விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.