இந்தோனேஷியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இந்தோனேஷியாவில் பல தீவுகள் உள்ளன. அதில், மனாடோ-தஹுடா தீவுகளுக்கு இடையே கே எம் பார்சிலோனா விஏ என்ற சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது. இது அருகில் உள்ள தீவுகளுக்கும் சென்று வருகிறது.
மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் இந்த கப்பல் சென்று கொண்டு இருந்தது. திடீரென இந்தக் கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் , பேரிடர் கால மீட்பு குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.