News

இலங்கையில் முழுமையாக நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்!

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது. இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன. அந்தவகையில் செப்டெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும்.

அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top