காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோதும் அங்கு ஊட்டச் சத்து குறைபாட்டால் மேலும் ஏழு பேர் உயிரிழந்திருப்பதோடு உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் உட்பட இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் பலர் பலியாகியுள்ளனர்.
காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து, ஹமாஸ் அமைப்பு தடுத்து வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவித்து இரு நாட்டு தீர்வு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் பிரான்ஸ் தலைமையிலான பிரகடனத்திற்கு இதுவரை பதினைந்து நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
‘இரு நாட்டு தீர்வை நோக்கிய அத்தியாவசிய படியாக பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கு எமது நாடுகள் (நாம்) ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளோம், ஆதரவை வெளிப்படுத்தியுள்ளோம் அல்லது வெளிப்படுத்த விரும்புகிறோம் அல்லது சாதகமான நிலைப்பாட்டில் உள்ளோம்’ என்று இந்த பிரகடனத்திற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் இணையாத நாடுகளுக்கும் அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கையொப்பம் இட்ட நாடுகளில் அன்டோரா, அவுஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சன்பேர்க், மோல்டா, நோர்வே, போர்த்துக்கல், சான் மாரியோ, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
மறுபுறம் காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘போதுமான நடவடிக்கைகள்’ மற்றும் நீடித்த அமைதி முன்னெடுப்புக்கு உறுதியளிக்காத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பரில் பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற பிரிட்டன் அமைச்சரவையின் அவசர கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்து வருகின்றன.
இந்நிலையில் காசாவில் தாக்குதல்களை நிறுத்தாத இஸ்ரேல் காசா பகுதிளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பு மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் காசாவை இணைக்கத் திட்டமிடுவதாக இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் பலஸ்தீன தனி நாடு குறித்த எதிர்பார்ப்பை இல்லாமல் செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினரான சீவ் எல்கின், அரச வானொலிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘நிலங்களை இழப்பதே எமது எதிரிகளுக்கு வலி மிக்கதாக இருக்கும். ஹமாஸ் எங்களுடன் விளையாடும் தருணத்தில், அவர்கள் ஒருபோதும் திரும்பப் பெற முடியாத வகையில் நிலங்களை இழப்பார்கள் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்துவது ஒரு அழுத்தம் கொடுப்பதற்கான குறிப்பிடத்தக்க கருவியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக இடம்பெற்று வந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் விலகிக் கொண்டது. இந்த பேச்சவார்த்தையில் நீடிக்கும் இழுபறியை அந்த அமைப்பு இதற்கு காரணமாகக் கூறி இருந்தது.
இரு நாட்டு தீர்வு தொடர்பில் எகிப்து, கட்டார் மற்றும் அரபு லீக்கின் ஆதரவுடன் சவூதி அரேபியா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பிரகடனத்தில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஓர் அங்கமாக, காசாவில் ஹமாஸ் தனது ஆட்சியை கைவிட வேண்டும் என்றும் பலஸ்தீன அதிகாரசபைக்கு தமது ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹமாஸ் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பலஸ்தீன அதிகாரசபை தற்கோது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துடன் இயங்கி வருகிறது. ஆயுதங்களை கைவிடும் முந்தைய அழைப்புகளை ஹமாஸ் அமைப்பு நிராகரித்ததோடு, காசாவில் பலஸ்தீன அதிகாரசபை ஆட்சி புரிவதை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
பலஸ்தீனர்களுடன் அமைதியை வரும்புவதாக அண்மையில் குறிப்பிட்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்கால சுதந்திர நாடு என்பது இஸ்ரேலின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அதன் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு இஸ்ரேலுடனேயே இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நெதன்யாகு அமைச்சரவையில் தீவிர வலதுசாரிகள் ஒட்டுமொத்த பலஸ்தீன நிலத்தையும் இஸ்ரேலுடன் இணைப்பதற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். காசாவில் யூத குடியேற்றங்களை நிறுவுவதற்கான வாய்ப்பு முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதாக இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். காசா இஸ்ரேலிய தேசத்தின் பிரிக்க முடியாத பகுதி என்றும் குறிப்பிட்டார்.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் நீடித்து வரும் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 103 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் உதவி பெறுவதற்கு காத்திருந்த 60 பேரும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 399 பேர் காயமடைந்துள்ளளனர்.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 60,138 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 146,269 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்ட பட்டினி மரணங்கள் அதிகரித்து வரும் சூழலில் அங்கு உதவிகள் செல்வது போதுமானதாக இல்லை என்று ஐ.நா. மற்றும் உதவிக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. அங்கு பட்டினியால் நேற்று மேலும் ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்திப்பதோடு இவர்களில் 89 பேர் சிறுவர்களாவர்.