இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன அரசை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
காசாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர கணிசமான நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசாங்கம் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதில் போர் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை நிலைநாட்டும் செயன்முறைக்கான உறுதிப்பாடு ஆகியவை அடங்கும்.
சர்வதேச ரீதியில் சுமார் 139 நாடுகள் பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கின்றன.
கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனும் பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் வைத்து உறுதியளித்திருந்தார்.
இவ்வாறிருக்க, காசாவில் பஞ்சத்தின் நிலை மிகவும் மோசமாக மாறியிருப்பதாக ஐ.நாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும், காசாவிற்கு செல்லும் உதவி விநியோகத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் காசாவில் பட்டினி இல்லை என்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், காசாவிற்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுப்பதாகவும் அவற்றை உடனடியாக உள்ளே அனுமதிக்குமாறும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து 60,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.