‘ஏர் இந்தியா’ விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சூழலில் தங்களுக்கு வந்து சேர்ந்தது வேறொரு நபரின் உடல் என பிரிட்டனை சேர்ந்த இரு குடும்பத்தினர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ போயிங் விமானம், புறப்பட்ட சில நொடிகளில் மருத்துவ விடுதி கட்டடத்தில் மோதி நொறுங்கியது.
ஒப்படைப்பு ஓட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய இந்த கொடூர விபத்தில், 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் உடல்கள் அனைத்தும் எரிந்து கரிகட்டையானதால், டி.என்.ஏ., எனப்படும், மரபணு பரிசோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்த வகையில், 53 பிரிட்டன் நாட்டினரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக் கொண்டவர்களில், பெரும்பாலானோர் இந்தியாவிலேயே இறுதி சடங்கு செய்தனர். 12 பேரின் உடல்கள் மட்டும் விமானத்தில் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள உறவினர் ஒருவர், எதேச்சையாக டி.என்.ஏ., பரிசோதனை நடத்தி ஒப்பிட்டு பார்த்ததில், வந்து சேர்ந்திருப்பது தங்களது உறவினரின் உடல் அல்ல; வேறொருவருடையது என தெரியவந்தது.
அதே போல் மற்றொரு குடும்பத்தினர் நடத்திய இறுதிச் சடங்கின் போது, ஒரே சவப்பெட்டிக்குள் இரு உடல்களின் மிச்சங்கள் ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால், இறுதிச் சடங்கை அந்த குடும்பத்தினர் கடைசி நேரத்தில் ரத்து செய்ததாக பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘டெய்லி மெயில்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
பேச்சு இரு குடும்பத்தினருக்கு தவறான உடல்கள் அனுப்பிவைக்கப்பட்ட செய்தி குறித்து பிரிட்டன் அரசுடன் கேட்டறிந்து வருகிறோம். இறந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்தும் அதிகபட்ச பொறுப்புடனும், அதற்குரிய மரபுகளுடனும் தான் பின்பற்றப்பட்டது. இதில் எப்படி தவறு நிகழ்ந்தது என தெரியவில்லை. பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பிரிட்டன் அரசு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘டி.என்.ஏ., பரிசோதனைக்குப் பின் அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லை’ என கூறப்படுகிறது. இந்த பணியை, ‘ஏர் இந்தியா’ ஏற்பாடு செய்த சர்வதேச நிறுவனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.