காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதேவேளை, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போரை 60 நாட்கள் தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்துள்ளார். போரை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காசா முனையில் இன்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். அதேபோல், காசா முனையில் நிவாரண பொருட்கள் வாங்க காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியது ஹமாஸ் ஆயுதக்குழுவினரா?, இஸ்ரேல் பாதுகாப்புப்படையினரா?, நிவாரண பொருட்களை திருடிச்செல்லும் கொள்ளை கும்பலா? என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை.