காசாவுக்கான உதவி விநியோகத்தில் இஸ்ரேல் தளர்வுகளை ஏற்படுத்தியபோதும் அங்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என்று ஐ.நா எச்சரித்திருக்கும் நிலையில் குழந்தைகளுக்கான பால்மா இன்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் மேலும் இரு குழந்தைகள் உட்பட பட்டினியால் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காசாவின் மூன்று இடங்களில் தினசரி போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தபோதும் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வரும் தாக்குதல்களில் நேற்றும் பலஸ்தீர்கள் பலர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன குறிப்பாக உதவி விநியோக மையங்களில் கூடும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மனிதாபிமான வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதித்த நிலையில் காசாவில் பட்டினியில் உள்ள மக்களை அடைவதற்கு முடியுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் பட்டினியை தடுப்பது மற்றும் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சி அடைவதை தடுப்பதற்கு போதுமான அளவு விநியோகங்கள் இடம்பெறவில்லை என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மறுபுறம் காசாவுக்குள் நுழையும் உதவி வாகனங்களை அங்கு பட்டினியால் தவித்து வரும் பலஸ்தீனர்கள் இடைமறித்து அதில் உள்ள பொருட்களை சூறையாடி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கெரம் ஷலோம் மற்றும் சகிம் எல்லைக் கடவைகள் வழியாக உதவி லொறிகள் காசாவுக்குள் நுழைந்துள்ளன. இவ்வாறு 73 லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் மாவு, உணவுப் பொதிகள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. எனினும் இதில் ஒரு லொறி கூட களஞ்சியங்களை அடையவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்ற இஸ்ரேல் காசாவுக்கு வானில் இருந்து உதவிகளை போடவும் அனுமதி அளித்துள்ளது. இதன்படி இஸ்ரேலுடன் ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியமும் பரசூட் மூலம் உதவிகளை போட்டன. 25 தொன் உதவிகளை போட்டதாக ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. எனினும் இது தரைவழியாக உதவிகளை வழங்குவதற்கு மாற்றாக அமையாது என்று ஜோர்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் உதவி நிறுவனங்களும் ஏற்கனவே இதனை வலியுறுத்தியுள்ளன. பரசூட் மூலம் உதவிகளை போடுவது செலவு மிக்கது, செயல்திறன் அற்றது மாத்திரமன்றி பட்டியினில் உள்ள மக்களின் உயிரை பறிக்கக் கூடியது என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி குறிப்பிட்டுள்ளார். தரைவழியாக மேலும் உதவிகளை அனுமதிக்க அவர் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முழுமையாக முடக்கி இருக்கும் நிலையில் அண்மைய நாட்களில் காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சர்வதேச அளவில் அவதானத்தைப் பெற்றுள்ளது. இதனையடுத்தே காசாவுக்கான உதவிகளை அதிகரிக்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.
வடக்கு காசாவின் காசா நகரில் உள்ள அல் ஷிபா வைத்தியசாலையில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முஹமது இப்ராஹிம் அதாஸ் என்ற சிசு உயிரிழந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. காசா நகர் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இங்கு ஐந்து வயதுக்கு குறைவான ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அது கூறியது.
குழந்தைகளுக்கான பால்மாவில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அது ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்க காரணமாகக் கூடும் என்றும் காசா அரச ஊடக அலுவலகம் எச்சரித்துள்ளது. ‘இந்த கொடிய மற்றும் கடுமையான முடக்கம் காரணமாக ஒரு வயதுக்குக் குறைவான 40,000க்கும் அதிகமான குழந்தைகள் மெதுவாக உயிரிழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன’ என்று அந்த அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இரு குழந்தைகள் உட்பட 14 பேர் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களும் தொடர்ந்து நீடிப்பதோடு நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு மற்றும் மத்திய காசாவில் நேற்று காலை வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய நிலையில் பலரும் காணாமல்போயிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் வழங்கப்படும் உதவிகளை பெறுவதற்கு காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஒன்பது பேரும் அடங்குகின்றனர்.
இதேவேளை காசாவில் இனப்படுகொலை தொடர்ந்து நீடிப்பதோடு பொதுமக்கள் அடிப்படை தேவைகள் இன்றி தவித்துவரும் நிலையில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போரை தீவிரப்படுத்துவதற்காக இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காசாவின் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கலீல் அல் ஹய்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியதாவது, மேலும் ஆலோசனை பெறுதவற்காக டோஹாவில் இருந்து தமது பேச்சுவார்த்தையாளர்களை இஸ்ரேல் திரும்பப் பெற்றதாக குறிப்பிட்டார். புதிய போர் நிறுத்த திட்டத்திற்கு ஆக்கபூர்வமான பதில் அளித்ததாக ஹமாஸ் கூறியிருந்த நிலையிலேயே இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
‘காசாவில் உள்ள எமது குழந்தைகள், பெண்கள் மீது முற்றுகை, இனப்படுகொலை மற்றும் மட்டினிக்கு மத்தியில் பேச்சுவார்த்தையை தொடர்வதில் அர்த்தம் இல்லை’ என்று அல் ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.