கென்யாவில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடக்க அந்நாட்டு பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பல்வேறு இடங்களில் தீயிட்டு கொளுத்தியதாகவும், பொலிஸார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
கென்யாவில் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் திகதியன்று நடைபெற்ற மிகப் பெரியளவிலான மக்கள் போராட்டத்தின் மூலம் அந்நாடு ஒரேயொரு கட்சியின் ஆட்சியிலிருந்து விடுபட்டு பலகட்சிகளுடைய ஜனநாயக நாடாக உருவானது. சப சபா எனக் குறிப்பிடப்படும் அந்தப் போராட்டமானது , அந்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதால், அதன் நினைவு நாளான ஜூலை 7 ஆம் திகதி நைரோபியின் முக்கிய வீதிகள் முடக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டன.
இந்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் பங்கெடுத்த இந்தப் போராட்டத்தில், அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், 11 பேர் பலியானதாகவும், 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், 52 காவலர்கள் உள்ளிட்ட 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.