செம்மணி மனித புதைக்குழி பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் சர்வதேச கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பேரிணியானது, நாளை(21) அவுஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து கான்பராவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இப்பேரணியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பின்வருமாறு,
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட பல மனித புதைகுழிகள் பற்றிய முழுமையானச் சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும்.
- எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனிதவுரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது வலுவான தீர்மானத்தைக் கொண்டுவர அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
- தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் புரிந்த படை அதிகாரிகள் மீதான பயணத்தடையை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
- தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் ஏதிலிகளுக்கான பாதுகாப்பை அனைத்து நாடுகளும் பொறுப்புணர்வுடன் வழங்கவேண்டும்.
- சிறிலங்கா அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதுடன் தமிழர் தாயகத்தைப் பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் இன்றும் தொடர்ந்து வரும் தமிழன அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும் நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
- தமிழர்கள் மீது கடந்த 76 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனவழிப்புச் செயற்பாட்டை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாகத் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.
இதன்படி, இப்பேரணியானது மதியம் 12 மணிக்கு சிறிலங்கா தூதுவரகத்துக்கு முன்பாக ஆரம்பித்து, பன்னாட்டு தூதுவரகங்கள் மற்றும் ஐநா தூதுவரகம் வழியாக சென்று அவஸ்திரேலிய வெளி விவகார துறை அமைச்சு அலுவலகத்தில் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டு நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பேரணியின் நோக்கம் வெற்றிபெற அனைத்து ஊடகங்கள், அமைப்புகள் உட்பட அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.